எதிர்க்கவிதை தாக்குப்பிடிக்குமா?

நண்பர் ஒருவர் நான் நிக்கனோர் பார்ராவின் ஸ்பானிய கவிதைகளைப் படித்துவிட்டுத் தானும் பல காலமாக எதிர்க்கவிஞராக இயங்கி வருவதாக என்னிடம் சொன்னார்.

நிக்கனோர் பார்ராவின் கவிதைகளை இரு வேறு சிந்தனைகள் எனக்குத் தோன்றின. ஒன்று, தமிழில் பார்ராவின் அளவுக்குக் கிரேக்க எதிர்க்கவிஞர் எலியஸ் பெட்ரோபூலோஸ் ஏன் வாசிக்கப்படவில்லை, அல்லது பேசப்படவில்லை (அல்லது ஏன் வேறெந்த உலக எதிர்க்கவிஞர்களும் பேசப்படவில்லை?)

இரண்டு, இந்த எதிர்க்கவிதை தாக்குப்பிடிக்குமா?

முதல் சிந்தனையை அப்படியே கைவிட்டு விட்டேன். புரிந்தாலும் புரியாவிட்டாலும் போர்ஹேஸையும் பாராட்டிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய விசாரிப்புக்கள் அபத்தம்.
எதிர்க்கவிதைகள் தாக்குப்பிடிக்குமா என்றால் அவை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்குமே தவிர கவிதையின் இடத்தை என்றுமே பிடித்துவிடாது என்பது எனது அபிப்பிராயம்.

எதிர்க்கவிதை அடிப்படையில் கவிதை என்ற வடிவத்தின் அத்தியாவசியக் கூறுகள் என்று அறியப்படுபவைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு எழுதப்படும் கவிதை.

குறிப்பாக லத்தீன் அமெரிக்க இலக்கியச் சூழலில் கவிதைகள் சந்த ஒழுங்கு, அணியலங்காரம், புளித்துப் போன பாடுபொருள் என்ற விஷயங்களில் மக்கிப் போய் நிலவும் சமுதாய அவலங்களோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத சொல் பிண்டங்களாக மாறி இருந்த சமயத்தில்தான் பார்ராவின் எதிர்க்கவிதைகள் தோன்றின.

பொது ஜனத்தின் அன்றாட பேச்சு வழக்கு, பயன்படுத்தும் சொற்கள், தேய்வழக்குகள், சாமானியர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் என்பவைதான் எதிர்க்கவிதையின் லட்சணங்கள்.
லத்தீன் அமெரிக்கச் சூழலில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நிர்பந்தங்களை சாதாரண பேச்சு வழக்கில் உள்ள கவிதை வடிவத்தில் எடுத்துக் காட்டுவது பார்ராவின் குறிக்கோள்.

மிகப் பெரிய அவலங்களை சாதாரண பேச்சு வழக்கிலும் படிமங்களாலும் சொல்லும்போது ஒரு வகையான முரண் நகைச்சுவை சாத்தியமாகிறது. அவ்வகை முரண் நகைச்சுவையே வரிவரியாக அழுது வடிவதைக் காட்டிலும் அவலத்தின் தீவிரத்தை வாசகனுக்குத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது என்பது எதிர்க்கவிதையின் அடிப்படை சித்தாந்தம்.

அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகுட் தன்னுடைய Slaughterhouse 5 நாவலில் இரண்டாம் உலகப் போரின் கொடூரத்தை எடுத்துக் காட்ட இதே உத்தியைப் பயன்படுத்துகிறார்.

ஆனால் எப்படிப் பார்த்தாலும் எதிர்க்கவிதை என்பது ஒரு குறிப்பிட்டச் சூழலுக்குப் பயன்படுத்தும் உத்திதான். அதுவே முற்று முதலான கவிதை வடிவம் அல்ல. உலக எதிர்க்கவிதை பிதாமகர் என்று அழைக்கப்படும் பார்ராகூட தொடர்ந்து அழகியல் கூறுகளை உள்ளடக்கிய கவிதைகளை எழுதி வந்திருக்கிறார்.

1954ல் வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்புக்கு “கவிதைகளும் எதிர்ம்கவிதைகளும்” என்பது தலைப்பு.

மேலும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் பெரிய விருப்பமுள்ள பார்ரா ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய iambic pentameter ஆங்கில யாப்பு வடிவத்துக்கு ஒப்பான ஸ்பானிய யாப்பு வடிவத்தில் கவிதைகள் எழுதியிருக்கிறார். (இந்த யாப்பு கவிதைகளுக்கு அவர் தந்த பெயர் ‘பழைய ஜாடிகளில் புது மது’ அல்லது ‘அழகிய கிரேக்க ஜாடியில் மலம்’).
சில ஆயிரம் வரலாறுடைய தமிழ்க் கவிதை வெளியில் எதிர்க்கவிதைகள் பல உத்திகளில் ஒன்றாக இருக்குமே அன்றி அதுவே எதிர்க்கால தமிழ்க் கவிதக் வடிவமாகாது.

சாமியைத் தூக்கி வரத்தான் பல்லக்கு, பல்லக்கே சாமியாகிவிடக் கூடாது.

Leave a comment