சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் – ஒரு பார்வை

முன்னரே சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஐப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அந்தப் பதிவு ஒரு குறிப்பிட்ட மாதத்தி\nன் இதழைப் பற்றிய என் கருத்தாகவே இருந்தது.

இன்று அக்டோபர் மாத இதழ் வாசிக்கக் கிடைத்தது. கிட்டத்தட்ட சிராங்கூன் டைம்ஸ் தொடங்கியதில் இருந்தே வாசித்து வருகிறேன். இந்தக் குறிப்பிட்ட இதழின் உள்ளடக்கத்தைப் பற்றி மட்டும் அல்லாமல், கொஞ்சம் பின்னால் மூன்றடி எடுத்து வைத்து சிராங்கூன் டைம்ஸ்-ஐப் பற்றி திரிவிக்கிரமப் பார்வையாக சில கருத்துகளைச் சொல்ல இது நல்ல தருணம் என்றே நினைக்கிறேன்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காத பளபளப்பான தாளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், தி சிராங்கூன் டைம்ஸ்-இன் வளர்ச்சி மிகவும் கர்வம் தருவதாக இருக்கிறது.

சிங்கப்பூர்ச் சூழலில் – அதுவும் தமிழில் – அச்சில் மாதாந்திர இதழை வெளியிடுவது அசகாயச் சூரத்தனம்தான். பல பிரபலமான இதழ்கள் இப்போது மின்னிதழ்களாக மாறிவிட்ட காலம் இது. சிராங்கூன் டைம்ஸ் இதழைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற பிடிப்பும், அதற்கென மிகச் சிறந்த குழு ஒன்றைச் சிராங்கூன் டைமஸ்-இன் பொறுப்பாளர்கள் அமைத்திருப்பதும் மாதா மாதம் மெருகேறி வரும் இதழின் உள்ளடக்கத்திலிருந்தே தெரிகிறது.

குறிப்பாக சிராங்கூன் டைம்ஸ்-இல் வெளியாகும் நேர்காணல்கள் மிகச் சிறப்பாய் அமைந்து வருகின்றன. நேர்காணலில் பங்கெடுக்கும் ஆளுமைகளைப் பற்றி மட்டுமல்லாமல் சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்வு நிலைகளையும் சவால்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் சமீப காலமாய் சிராங்கூன் டைம்ஸ் நேர்காணல்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

அக்டோபர் இதழில் ஜாய்ஸ் கிங்ஸ்லியிடம் சித்ரா ரமேஷ் நடத்திய நேர்காணலும், முகைதீனின் நேர்காணல் வகை அறிமுகமும் இதற்கு உதாரணங்கள். இவ்வகையில் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் அயலக அரசியல், இலக்கிய மற்றும் வர்த்தக ஆளுமைகளை பேட்டி எடுத்து சிராங்கூன் டைம்ஸ் வெளியிடும் என்றால் இத்தகைய நேர்காணல்களே சிராங்கூன் டைம்ஸ்-க்கு நல்ல முகவரியாக அமையக் கூடும். அதற்குரிய சாத்தியக் கூறுகள் சிராங்கூன் டைம்ஸ் எழுத்தாளர்களிடம் நிறையவே இருக்கின்றன.

அடுத்தது சிராங்கூன் டைம்ஸ்-இல் வெளிவரும் கவிதைகள் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. ஒரு காலத்தில் இந்த இதழில் வெளிவந்த கவிதைகளைப் பற்றி விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் விமர்சனத்துக்கு இடமில்லாதபடி மட்டுமல்ல, ஆச்சரியப்படும் வகையிலும் கவிதைகளை வெளியிடுகிறார்கள். (அதற்குக் காரணம் யார் என்று தெரியும். மகேஷ் குமாருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவருடைய மொழிபெயர்ப்புக் கவிதைகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.)

ஆனால் ஒரே வகையான பண்டங்கள் சிறப்பாக இருந்தாலும் திகட்டிப்போகும் என்ற அடிப்படையில் மொழிப்பெயர்க்கும் கவிதைகளிலும், இதழில் வெளியாகும் மற்ற கவிதைகளிலும் மேலும் பலதரப்பட்ட, பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த கவிதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

சிறுகதைகள் எப்போதும் சிராங்கூன் டைம்ஸ்-க்குப் பலம். சிராங்கூன் டைம்ஸ்-இல் சிங்கப்பூரின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். நான் அறிந்தவரை கவிதைகள் போல் அல்லாமல் இதழில் வெளியாகும் கதைகள் பலதரப்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நல்ல கதைகள் சிராங்கூன் டைம்ஸ்-இல் வருகின்றன என்று விளம்பரப்படுத்தினால் இதழுக்கும் வாசகர் வட்டம் அதிகமாகும்.

(முகநூலிலாவது விளம்பரப்படுத்துங்கள். மேலும் ஒரு யோசனை – முன்னோடி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்து அவ்வப்போது மறு பிரசுரம் செய்தால் என்ன?)

கடைசியாக, கட்டுரைகள். சிராங்கூன் டைம்ஸ்-இல் தொடர்ந்து மிகப் பயனுள்ள சிங்கப்பூர் நிலவியல், வரலாறு சார்ந்த கட்டுரைகள் வெளிவருகின்றன. தற்போது வெளிவந்திருக்கும் ஷா நவாஸ்-இன் ருசி பேதம் போன்ற கட்டுரைகளும் உண்டு.

சிராங்கூன் டைம்ஸ்-இல் கட்டுரைக்கென மிக உயர்ந்த தகுதியை வைத்திருக்கிறார்கள். சரியான தரவுகளின் அடிப்படையில் ஆழமான கருத்துகளை முன்னெடுத்து வைக்கும் கட்டுரைகள். எனக்குத் தெரிந்த வரைக்கும் தற்காலச் சிங்கப்பூர்ச் சூழலில் தமிழில் கட்டுரைகளைசூழலில் வளர்த்ததில் சிராங்கூன் டைம்ஸ்-க்குத்தான் மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆனாலும் கட்டுரைகளை இன்னமும் ஜனரஞ்சகமாக வெளியிடலாம். நல்ல கட்டுரைகள்கூட நீளத்தின் காரணத்தால் கண்களுக்கும் கருத்துக்கும் சோர்வு ஏற்படுத்தலாம். இவையெல்லாம் கட்டுரைகளை பக்கங்களின் அமைக்கும் முறையிலும் கட்டுரைக்கு நடுநடுவே சின்னச் சின்ன உபதலைப்புக்களைத் தருவதாலும் சரியாகக் கூடியதே.

முப்பத்தேழு இதழ்களை வளர்முகமாகவே கடந்து வந்திருப்பது சாதாரண காரியமல்ல. அத்தனை பேரின் கடுமையான உழைப்பு இதில் நிறைந்துள்ளது.

சிராங்கூன் டைம்ஸ்-இன் முப்பத்தேழாவது இதழைக் காணும்போது இதழின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமான முறையில் தீர்மானிப்பதும், தேக்க நிலையும் ‘டெம்ப்ளேட்’ தன்மையும் வராமல் காப்பதும், இன்னும் பலமான விளம்பர உத்திகளும் சிராங்கூன் டைம்ஸ்-ஐ அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று தோன்றுகிறது.

அவர்கள் செய்வார்கள். இதற்குத் தேவையான பலமும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது.

(இதழ் பெற விரும்புவர்கள் http://www.serangoontimes.com போய்ப் பார்க்கலாம்)

Leave a comment