நாவலும் செவ்விலக்கியமும்

செவ்விலக்கியங்களைப் பற்றிப் பேசும் அதே வேளையில் நாவல் வடிவத்தின் வரலாற்றையும், நாவலின் உள்ளடக்கத்தில் காலப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், நாவல் புற இலக்கணங்களில் எவ்வளவு மாறினாலும் அடிப்படையில் மாறாமல் தொடர்ந்து வந்திருக்கும் அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியம்.

காரணம்: கால்வினோ செவ்விலக்கியங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்ற தனது கட்டுரை இடம்பெற்றுள்ள மற்ற 35 கட்டுரைகளில் ஒன்பதில் எட்டுப் பங்கு நாவல்களைப் பற்றித்தான் எழுதுகிறார். 4 கட்டுரைகள் மட்டுமே பழம் கிரேக்க அல்லது ரோமானிய காவியங்களைப் பற்றி உள்ளன.

[இக்கட்டுரைத் தொகுப்பில் செவ்விலக்கியக் கட்டுரையோடு நாவல்களைப் பற்றிய கட்டுரையில் கால்வினோ சேர்க்க விரும்பினாரா அல்லது அவர் இறந்த பிறகு எதேச்சையாக அவை சேர்க்கப்பட்டனவா என்ற கேள்வி எழலாம். விடை: அவர்தான் சேர்க்க விரும்பினார். சாட்சி: அவர் மனைவி].

செவ்விலக்கியமாகக் கால்வினோ ஒரு சிறுகதையையோ, தனிக் கவிதையையோ அல்லது முழுக் கவிதைத் தொகுப்பையோகூட சேர்க்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அது உருவான நாளிலிருந்து நாவலே வாசகர்களைக் கவரும் வடிவமாக இருந்து வந்திருக்கிறது.
நாவல் உருவான, மாற்றம்கண்ட வரலாறுகளைப் புரிந்து கொள்வதன் மூலம் அதன் செவ்விலக்கியக் கூறுகளையும், அதன் சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும்.

நாவலின் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் பொதுவாக இரண்டு விஷயங்களைப் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, அதன் கட்டமைப்பு. இரண்டாவதாக அதன் உள்ளடக்கம்.

முதலில் அதன் கட்டமைப்பு. நிறைய வார்த்தைகளைப் போட்டு, பல கதைமாந்தர்களோடு மிகப் பெரிய கதையை உரைநடையில் சொல்வதுதான் நாவல் என்பது நாவலுக்குரிய சற்றே பொதுவான வரையறை.இது முற்றிலும் தவறும் அல்ல. ஆனால் இதைவிட சற்றுத் துல்லியமான வரையறை இருக்கிறது.
நாவல் என்பது சுமார் 40,000 வார்த்தைகளில் தனக்குள்ளே முழுமையடைந்துவிடும் உரைநடை புனைவு.

மேற்கூறிய வரியில் உள்ள ‘விதிகள்’ அனைத்தும் பல்வேறு நாவல்களில் மீறபட்டுள்ளன என்பது வேறு விஷயம். ஆனால் இரண்டு விவரங்கள் கவனிக்கத் தக்கவை.

(1) ‘புனைவு’ என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர ‘புனைவுக்கதை’ என்று சொல்லப்படவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தலைமைக் கதாபாத்திரங்கள் இருந்தாலும்கூட நாவல் நீளமான சிறுகதையோ நெடுங்கதையோ அல்ல. அவற்றின் கதை ஒருமை நாவலுக்கு இல்லை. நாவல் மிகத் தெளிவான பன்முகத்தன்மை கொண்டது – இதை ஜெயமோகன் எப்போதோ சொல்லிவிட்டார்;

(2) ‘தனக்குள்ளே முடிவடைந்துவிடும்’ மற்றும் ‘நாற்பதாயிரம் வார்த்தைகள்’. நாவல் என்ற வடிவம் அச்சு இயந்திரம் என்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட வடிவம். அச்சு இயந்திரத்தால் என்ன முடியுமோ அதுதான் நாவலின் அடிப்படை வடிவம். (அப்படியென்றால் கணினி மற்றும் இணையம் என்ற தொழில்நுட்ப மாற்றத்தால் புதிய இலக்கிய வடிவம் தோன்றுமா என்றால், நிச்சயமாகத் தோன்றும். தோன்ற வேண்டும்).

இரண்டாவது நாவலின் உள்ளடக்கம். சிறுகதை, கவிதைகளை எல்லாம் புறந்தள்ளிவிடும் நாவலின் ஈர்ப்புத்தன்மையை விளக்க மரீனா மெக்கே தனது நாவல் அறிமுகத்தில் ஒரு சுவாரஸ்யமான கருத்தை முன் வைக்கிறார். நாவல் வடிவத்தின் ஈர்ப்பை விளக்க வேண்டும் என்றால் 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியச் சூழலில் நாவல்கல் தோன்றிய போது அவற்றுக்கு உண்டான கடும் எதிர்ப்பை உற்றுப் பார்க்க வேண்டும் என்கிறார். நாவலுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்புக்கள் நாவல்கள் இளையர்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையைப் பற்றிய தவறான புரிதல்களையும் ஒழுக்கக் கேடுகளையும் கற்றுக் கொடுப்பதாக குற்றம் சாட்டின.

நாவல் வாழ்க்கையோடு கொண்டுள்ள வசீகர நெருக்கமும் வாழ்க்கையை அது துல்லியமாகப் பிரதிபலித்ததுமே நாவலுக்கு எதிராக எழுந்த இந்த எதிர்ப்புக்களுக்குக் காரணம் என்பது மெக்கேயின் கூற்று.

அதாவது சிறுகதைகளைவிட, கவிதைகளைவிட நாவல்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை அல்லது சமுதாய்ச் சூழலைப் பற்றிய.முழுமையான குறுக்கு வெட்டுப் பார்வையைத் தருவதாலும் அதே சமயம் அந்தச் சூழலில் வாழும் மனிதர்களின் மன எழுச்சிகளையும் போராட்டங்களையும் அழகியல் சார்ந்து படம் பிடிப்பதாலுமே நாவல்கள் உன்னதத்தை அடைகின்றன.

இதோ இங்கே கால்வினோ வாழ்வியலை முழுமையாகக் காட்டுதல் வந்துவிட்டது. இவ்விரண்டு அடிப்படை புரிதல்களைக் கொண்டு நாவல்களின் வளர்ச்சியைக் காணத் தொடங்கலாம்.

Response to “நாவலும் செவ்விலக்கியமும்”

Leave a comment