தமிழில் தொழில்முறை வாசகர்கள்

நண்பர் ஒருவர் புதிதாக வெளியிட்டுள்ள தனது மூன்று நூல்களை அனுப்பி வைத்திருக்கிறார், மூன்று நூல்களையும் சுயமாகப் பணம் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்.

நண்பர் பெரிய கை. பல்லாண்டுகளாக ஐடி துறையில் வேலை பார்ப்பவர். உயர்ந்த பதவி. நல்ல சம்பளம். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு. தான் இருக்கும் துறைக்கு ஏற்ப இலக்கியம் தொடர்பான இணைய தளங்களையும் முகநூலையும் விடாது வாசித்து இலக்கியப் பரிச்சயத்தை வளர்த்துக் கொண்டவர். இந்த நூல்கள் அவர் வெளியிட்டுள்ள முதல் மூன்று நூல்கள்.

அவர் அனுப்பிய நூல்களில் இரண்டு கவிதை நூல்கள். நூல்களின் தலைப்பைப் பார்த்ததும் தெரிந்து விட்டது, கவிதை நூல்தான் என்று. மூன்றாவது கொஞ்சம் நீளமான சொற்சித்திரங்கள்.

[ரொம்ப காலத்துக்கு முன்னால் புது கவிதை எதிர்ப்பாளர்கள் சிலர் புது கவிதைகளை உரைவீச்சுகள் என்று அழைப்பார்கள். கவிதை என்று சொல்ல மாட்டார்கள். புது கவிதைகளைக் கவிதைகள் என்று அழைக்காதவரை தமிழில் மரபுக் கவிதை வாழ்ந்துவிடும் என்பது அவர்களது திடமான நம்பிக்கை. அதே தோரணையில் நண்பர் எழுதிய சிறுகதைகளையும் சொற்சித்திரங்கள் என்று அழைக்கிறேன். இனிமேல் சிறுகதை வாழ்ந்துவிடும்].

கவிதை புத்தகங்களிலும் ஒவ்வொரு பக்கத்தின் இடது கீழ்க் கோடியிலும் எட்டிலிருந்து பத்து வரிகளுக்கு மிகாமல் கவிதை வரிகள் பேரங்காடியில் தொலைந்துபோன குழந்தைகளாகப் பயந்து ஒண்டிக் கொண்டிருந்தன. நண்பரிடம் நல்ல விஷயம். அவர் எந்த கவிஞரைப் போல் எழுத முயல்கிறார் என்பது அவருடைய முதல் இரண்டு வரிகளிலேயே தெரிந்துவிடும்.

விஷயம் அதுவல்ல. கேள்வி இதுதான்: நூல்களை அனுப்பி வைத்த நண்பர் நாளையோ நாளை மறுநாளோ அடுத்த வாரமோ நூல்கள் எப்படி இருந்தன என்று நிச்சயம் கேட்பார். இது பெரிய சிக்கல். பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் நயத்தக்க நாகரிகம் எனக்கு உண்டு என்றாலும் இந்த நூல்களைப் பாராட்டுவது அபத்தமான செயல். அதே சமயம் பிறர் முயற்சி கண்டு எள்ளக் கூடாது என்ற எண்ணமும் எனக்கு உண்டு. ஆனால் உண்மையைச் சொல்லாமல் போவது நான் அவருக்குச் செய்யும் துரோகம். அவர் எழுத்துகள் சிறப்பாக இருக்கின்றன என்று அவரை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது.

நண்பர் இந்த நூல்களைச் சுயமாக வெளியிடுவதற்கு முன்னால் நம்பிக்கையான சில பேரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கருத்து கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேற்கில் வெளியீட்டுக்கு முன்னால் இப்படி நூல்களை வாசித்துக் கருத்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பீட்டாமேற்கில் ரீடர்கள் என்று பெயர். சிலர் இதனைத் தொழில் முறையாகவும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பீட்டா வாசகர்களின் வேலையே ஒரு சராசரி வாசகனின் நிலையில் இருந்து ஒரு படைப்பைப் படித்துவிட்டுத் தன் கருத்தைச் சொல்வதே. [இத்தகைய பீட்டா வாசிப்புக்கு நிச்சயமாக நண்பர்கள் ஒத்துவர மாட்டார்கள். ஒரு வேளை மனைவியோ எதிரியோ போட்டியாளரோ ஒத்து வரலாம்].

இத்தகைய பீட்டா வாசிப்பாளர்களில் ஒருவரை நண்பர் அணுகியிருந்தால் அல்லது தமிழில் அப்படி ஒருவர் அவருக்கு வாய்த்திருந்தால் நூல்களை வெளியிடும் முன்னரே அவருக்குத் தன்னுடைய நூல்களைப் பற்றிய நல்ல அனுமானம் கிடைத்திருக்கும்.

சுய வெளியீடுகளை நான் குறை சொல்ல மாட்டேன். பல சிறப்பான சுய வெளியீட்டு நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சுய வெளியீட்டு நூல்கள் நல்ல வாசகரிடம் கொடுத்துக் கருத்துக் கேட்ட பின் பதிப்பிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கக் கூடும்.

தமிழில் இத்தகைய தொழில்முறை வாசகர்கள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அதுவரைக்கும் நான் புத்தகம் வெளியிடும் சில நண்பர்களிடம் எதை எப்படி சொல்வது என்பது பற்றித் தடுமாற வேண்டியதுதான்.

Leave a comment